டில்லி

தேர்தல் நிதி திரட்ட ஆம் ஆத்மி கட்சி விருந்துகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் மே மாதத்துடன் மக்களவையின் ஆயுட்காலம் முடிவடைகிறது. அதை ஒட்டி நடைபெற உள்ள தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. கூட்டணிப் பேச்சுக்களும், பிரசார திட்டங்களையும் கட்சிகள் மும்முரமாக செய்து வருகின்றன.

இதை ஒட்டி டில்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்ட முடிவில் கட்சியின் மக்களவை தேர்தல் பொறுப்பாளர் பங்கஜ் குப்தா, “இந்த கூட்டத்தில் வீடு வீடாக பிரசாரம் செய்வது குறித்து யோசனை தெரிவிக்கப்பட்டது.

டில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வீடு வீடாக பிரசாரம் செய்ய தொடர்களை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் நிதிக்காக கட்சியின் சார்பில் விருந்துகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வந்த உடன் விருந்துகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.

முக்கியமாக கடந்த தேர்தலில் எந்தெந்த இடங்களில் பிரசாரம் பலமாக நடைபெறவில்லை என்பது ஏற்கனவே கவனிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடங்களில் கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. வீடு வீடாக பிரசாரம் செய்வதால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும்” என தெரிவித்தார்.