லக்னோ:
உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி என்ற புயல் மையம் கொள்ள இருப்பதால், எதிர்த்துப் போராட முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
பிரியங்கா காந்தியை கிழக்கு உத்திரப்பிரதேச பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்தது.
லக்னோவில் உள்ள நூற்றாண்டு பழமையான காங்கிரஸ் கட்சி அலுவலகம் இதுநாள் வரை வெறிச்சோடிக் கிடந்தது.
பிரியங்காவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, கட்சி அலுவலகம் களை கட்டத் தொடங்கிவிட்டது. தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் தினமும் முகாமிட்டு வருகின்றனர். கட்சி அலுவலகத்தில் பிரியங்காவின் படத்தை பெரிய அளவில் டிஜிட்டர் பேனராக வைத்துள்ளனர்.
பிரியங்காவின் வருகை மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரயாக்ராஜ் என்று முதல்வர் யோகிநாத் பெயர் மாற்றம் செய்த அலகாபாத் நகரிலும் பிரியங்கா காந்தியின் வருகைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கும்பமேளா நடைபெற்றுவரும் அங்கு, பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் பதாகைகளில் ‘கங்கையின் மகள்’ என்று பிரியங்கா காந்தியை வர்ணித்துள்ளனர்.
அங்குள்ள ஜவஹர்லால் நேருவின் இல்லம் அருகே வைக்கப்பட்டுள்ள பதாகைகளில், ‘கங்கையின் மகளுக்கே உ.பியில் வெற்றி’ என்று எழுதியுள்ளனர்.
பிரியங்காவின் வருகை பாஜகவுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. கடந்த 2014-ல் பாஜக பெருவாரியாக வெற்றி பெற்ற தொகுதிகளை பிரியங்கா காந்தி குறிவைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு 2012-ல் இருந்த நகர்ப்புற இளைஞர் ஆதரவு, 2014-ல் அதிகபட்ச வாக்குறுதிகளால் பாஜகவுக்கு மாறியது. தற்போது, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்ற கோபம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவே தெரிகிறது.
தற்போது பிரியங்கா காந்தியின் வருகை இளைஞர்களின் வாக்குகளை கவருவதாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.பிரியங்கா காந்தி வருகைக்குப் பின்,முஸ்லிம், உயர் வகுப்பினர், தலித் வாக்குகள் காங்கிரஸ் பக்கம் திரும்புவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது.
சமீபத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலித்து வாக்குகளே காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலை உத்திரப்பிரதேசத்திலும் தொடரும் என்றே தெரிகிறது.
அதேபோல் முஸ்லிம்களின் ஆதரவும் உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அதிகரித்து வருகிறது.
சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா? அல்லது பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவாரா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் பிரியங்கா காந்தி எனும் புயல் வீசப் போகிறது. அதை பாஜகவினர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.