உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளுடன் வீரர்கள மல்லுக்கட்டி வருகின்றனர்.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நமது பாரம்பரிய கலாச்சார விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இன்று உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவரும் நிலையில் உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது.
மாடுப்பிடி வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 636 காளைகளும், 500 மாடுப்பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் திமிலை தொட்டுப்பார் என வாடிவாசலில் துள்ளி வரும் காளைகளை கட்டித்தழுவி அடக்க 75 வீரர்கள் களத்தில் இறங்கினர். வீரர்களிடம் பிடிபடாமல் ஓடிய காளை உரிமையாளர்கள் பரிசுப் பொருட்களை அள்ளிச் செல்கின்றனர். இதில் பாதுக்காப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும், 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவும், 5அவரசர உதவி ஆம்புலன்ஸ்களும் தயார் உள்ளன.
மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும், பார்வையாளார்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் வெற்றிப்பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தங்கக் காசு, தங்க செயின், வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, குக்கர், மிக்சிஉள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற 2 சுற்றுகளில் மாடுபிடி வீரர்கள் உட்பட 12பேர் காயமடைந்துள்ளனர்.