போபால்

த்தியப் பிரதேச தலைமைச் செயலக மாதாந்திர கூட்டத்தில் நேற்று வந்தே மாதரம் பாடுவது நிறுத்தப் பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று மாதாந்திரக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.   இந்த கூட்டத்தை மாநில பொது நிர்வாகத்துறை அமைச்சர் நடத்துவார்.  கடந்த 2005 ஆம் வருடத்தில் இருந்து இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் இசைப்பது வழக்கமாகும்.

நேற்று மத்தியப் பிரதேச தலைமைச் செயலகத்தில் இந்த மாதக் கூட்டம் நடைபெற்றது.   இந்த கூட்டத்தை மாநில பொது நிர்வாகத்துறையை கவனித்து வரும் முதல்வர் கமல்நாத் நடத்தினார்.   இந்த கூட்டத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வந்தே மாதரம் பாடலை இசைப்பது நிறுத்தபட்டுள்ளது.

இதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளர் ரஜனீஷ் அகர்வால், “முதல்வர் கமல்நாத் வந்தே மாதரம் பாடலை இசைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளாரா என்பதை மாநில மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.  வந்தே மாதரம் பாடல் இசைப்பதை நிறுத்தியதன் மூலம் நாட்டுப்பற்றுள்ள மக்களுக்கு அவர் புத்தாண்டு பரிசு அளித்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இது வேண்டுமென்றே நடக்கவில்லை எனவும் தவறுதலாக வந்தே மாதரம் பாடல் இசைக்கவில்லை எனவும் தெளிவு படுத்தி உள்ளனர்.

முதல்வர் கமல்நாத், “வந்தே மாதரம் இசைக்கக் கூடாது என எந்த ஒரு முடிவும் எடுக்கபடவில்லை.   நாங்கள் வந்தே மாதரம் இசைப்பதற்கு எதிரானவர்கள் இல்லை.  ஆனால் வந்தே மாதரம் பாடலையும் தேசப்பற்றையும் தேவையில்லாமல் இணைத்து பேசுவது தவறானதாகு.   வந்தே மாதரம் பாடலை இசைக்காத மக்கள் எல்லாம் தேசப் பற்று இல்லாதவர்களா?” என வினவி உள்ளார்.