மதுரை:

தூத்துக்குடியில் மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்த விரிவான அறிக்கையினை வரும் ஜூன் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற  கிளை உத்தரவிட்டுள்ளது

கடந்த 22ந்தேதி அன்று  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள,  தமிழக டிஜிபி உள்பட அதற்கு காரணமான  அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்  முத்து அமுதநாதன் மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதுபோல, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து,  ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று  கந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,   தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. அதற்கு  தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் பதிலால் கோபமடைந்த நீதிபதி, “சுட யார் உத்தரவிட்டது என்று கேட்டால், ஓய்வு பெற்ற அதிகாரி தலைமையில் விசாரணை அமைத்துள்ளதாக பதில் அளிக்கிறீர்கள்” என கூறினார்.

மேலும், தூத்துக்கடி  துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனு ஏற்புடையது அல்ல என்ற நீதிபதி, வரும் ஜூன் 6-ம் தேதி துப்பாக்கி சூரு குறித்த விரிவான அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.