சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது,  காவல்துறையின் மனிதாபிமானமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் குழுவினர், செய்தியாளர்களின் அதிரடி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் விறுவிறுவென அந்த இடத்தை விட்டு அகன்று சென்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை கொந்தளிப்பான நிலைக்கு தள்ளி உள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் மக்கள் கடந்த 3 நாட்களாக துயரங்களை அனுபவித்து வரும் நிலையில்,  மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தூத்துக்குடிக்கு செல்லாதது தமிழக அரசு மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முதல்வரை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  அனுமதி கேட்ட நிலையில், அவரை சந்திக்க எடப்பாடி மறுத்த நிலையில், அது போராட்டமாக மாறி, அவரை கைது செய்து  அழைத்துச் சென்ற பிறகே வேறு வழியில்லாமல் செய்தியாளர்களை சந்திக்க முன்வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அப்போது, தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்க ஆழ்ந்த அனுதாபங்கள் என்று வருத்தம் தெரிவிப்பதாக கூறியவர்,  போலீசார் தற்காப்புக்காவே துப்பாக்கி சூடு நடத்தியதாகவும்,  ஒருவர் அடித்தால் மற்றொருவர் திருப்பி அடிக்கத்தான் செய்வார் என்று கூறி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நியாயம் கற்பித்தார்.

அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவரிடம் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

‘ இதுவரையில் நீங்கள் தூத்துக்குடி மக்களை போய் சந்திக்காததற்கு காரணம் என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி, , ‘தூத்துகுடியில் 144 தடை போடப்பட்டிருக்கு, நான் சட்டத்தை மதிப்பவன். அதனால் செல்லவில்லை என்று சல்ஜாப்பு கூறினார்.

மேலும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய காரணம் என்ற கேள்விக்கு, மோசமான சூழலின்போது நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டியிருந்தது என்று பதில் அளித்தார்.

மேலும்,  ஸ்டெர்லைட் ஆலை மின் இணைப்பை துண்டித்தவர் ஜெயலலிதா, 2013ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர் ஜெ. என்று கூறிய எடப்பாடி என்று கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா என்று மற்றொரு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

ஆனால், எதற்கும் பதிலளிக்காமல் விறுவிறுவென  வேகமாக சென்றுவிட்டார்.