சென்னை:
முதல்வர் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் மோடியிடம் விண்ணப்பிக்கிறாரா என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி பா.ஜ.க.விற்கு தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை “தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு” என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்? இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா?’ என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.