பாட்னா
பீகார் மாநிலத்தை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து தலித் தலைவர் உதய் நாராயண் சௌத்ரி விலகி உள்ளார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார். இவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் இணைந்து பீகாரில் ஆட்சி செய்து வருகிறது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மன்சி இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஆவார். முன்னாள் முதல்வரும் பீகார் மாநில தலித் தலைவர்களில் ஒருவருமான இவர் கடந்த பிப்ரவரி மாதம் கூட்டணியில் இருந்து விலகினார்.
ஜிதன் ராம் மன்சி மதுவிலக்கை காரணம் காட்டி தலித் மக்களையும் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களையும் சிறையில் அடைப்பதாக குற்றம் சாட்டினார். இந்த மதுவலிக்கு சட்டத்தின் கீழ் ஏழை எளிய மகள் மட்டுமே துன்புறுத்தப் படுவதாகவும், பணக்காரர்களும் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து பெற்றவர்களும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் புத்த கயாவின் பாராளுமன்ற பாஜக உறுப்பினர் ஹரி மஞ்சியின் மகன் ராகுல் மஞ்சி மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் தலித் என்பதால் தான் கைது செய்யப்பட்டார் என்னும் செய்தி தொகுதி எங்கும் பரவியது. இது நடந்து 4 நாட்களில் கயா காவல்துறை அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆயினும் ஹரி மஞ்சி நிதிஷ்குமாருக்கு தனது ஆதரவை திரும்பப் பெற்றார்.
முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலித் தலைவர்களில் ஒருவருமான உதய் நாராயண் சௌத்ரி நேற்று கட்சியில் இருந்து விலகி உள்ளார். நிதிஷ் குமார் அரசு தலித்துக்களுக்கு எதிரானது அல்ல என்பதைக் காட்டவே காவல்துறை அதிகாரியை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சொந்தக் கட்சியில் இருந்தே தலித் தலைவர் ஒருவர் விலகியது நிதிஷ்குமாருக்கு மேலும் துயரத்தை உண்டாக்கி உள்ளது.