மதுராந்தகம்
மதுராந்தகம் அருகே இருந்த சூனாம்பேடு காவல்நிலையத்தில் அரசு ஊழியர் மரணம் அடைந்தது கொலை என கருதப்படுவதால் கடும் பரபரப்பு உண்டாகி உள்ளது.
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவில் சிற்றரசு (வயது 45) என்பவர் வசித்து வந்தார். அச்சிறுப்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலக எழுத்தரான இவருடன் இவரது மனைவி வெண்ணிலா (வயது 41), மகள்கள் பிரியங்கா (வயது 25), சோனா (வயது 22) ஆகியோரும் மகன் மணி (வயது 20) ஆகியோர் வசித்து வந்தனர்.
சிற்றரசுவுக்கும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான ஆனந்த் என்பவுக்கும் இடத் தகராறு வெகு நாட்களாக உள்ளது. நேற்று முன் தினம் மாலை தகராறு அடிதடி வரை போய் உள்ளது. ஆனந்த் சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் சிற்றரசுவை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு இரு குடும்பத்தினரும் கலந்து பேசி வழக்கை திரும்பப் பெற காவல்நிலையம் சென்றுள்ளனர்.
ஆய்வாளர் இல்லாததல் அடுத்த நாள் வருமாறு காவல் நிலைய காவலர்கள்கூறி உள்ளனர். அதன்படி நேற்று காலை அங்கு சென்ற சிற்றரசுவின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த காவலர்கள், “ அதிகாலை திடீரென சிற்றரசு லாக் அப் அறைக்குள் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட்டர். அவர் உட்லை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.
சிற்றரசுவின் மனைவி வெண்ணிலா, ”எனது கணவர் படித்த அரசு ஊழியர். அவர் நிச்சயம் தற்கொலை செய்துக் கொள்ள மாட்டார். காவல்துறையினர் அவரது உடைகளை கழற்றி உள்ளாடையுடன் அமர வைத்திருந்தனர். அதை தட்டிக் கேட்ட அவரை என் கண்முன்பே அடித்து உதைத்தனர். நேற்று இரவு வெகு நேரமாகியும் ஆய்வாளர் வராததால் நாங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டோம்.
இரவு காவல்துறையினர் அவரை மீண்டும் அடித்ததில் அவர் மரணம் அடைந்துள்ளார். இதை மறைக்க காவல்துறையினர் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறுகிறார்கள். அவர் 4 மணிக்கு தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் எங்களுக்கு இதை தெரிவிக்காமல் அதிக அளவு காவல்துறையினரை குவித்துள்ளனர். நாங்கள் சமரசமாக போவதாக தெரிவித்த பின் எனது கணவர் எதற்காக தற்கொலை செய்துக் கொள்வார்?” எனக் கேள்விகல் எழுப்பி உள்ளார்.
இந்த விவகாரம் வெளியில் பரவவே உள்ளூர் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் காவல் நிலையத்தின் முன்பு கூடினார்கள். கடும் பதட்டம் ஏற்பட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்ட எஸ் பி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார். வெண்ணிலாவுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் நேரில் ஆறுதல் கூறி உள்ளனர்.
சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் சிற்றரசுவின் சடலத்தை வாங்க மாட்டோம் என சிற்றரசுவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.