சென்னை:

மாமல்லபுரத்தை சோழர் பூமி என தவறாக பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்றும் தமிழகம் எங்கும் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.

அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாமல்லபுரம் என்பது சோழர்கள் ஆண்ட பூமி” என்று பேசினார். இது பெரும் அதிரச்சியை அளித்துள்ளது.

“பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரத்தை சோழர்கள் பூமி என பிரதமர் மோடி சொல்கிறாரே” என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சமூகவலைதளங்களிலும் இது குறித்த பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.

“எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா?” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.