டில்லி:

டில்லி உயர்நீதி மன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு  தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி மார்ச் 9ந்தேதி டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  முதல்வர் தரப்பு கடந்த 14ந் தி  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் நடைபெற உள்ள   உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திக மற்றும் அனைத்திந்திய அண்ணா அம்மா திமுக ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறு தினகரன் கோரியிருந்தார்.

இது தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறும், கட்சிக்கு தினகரன் பரிந்துரை செய்த பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டில்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து,  அதிமுக சார்பில், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி சார்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், குக்கர் சின்னம் தொடர்பாக யாரேனும் மனு தாக்கல் செய்தால், தன்னை கேட்காமல் உத்தரவுகள் பிறப்பிக்க கூடாது என  டிடிவி தினகரன் சார்பில் கேவியட் மனு கடந்த 12ந்தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.