
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்க!” என்று ரஜினி மற்றும் கமல் ஆகியோரை தயாரிப்பாளர் சதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்களை ஏற்றிவிட்ட ஏணியான தமிழ்த்திரையுலகம், இன்று நோய் பிடித்த யானையாக சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
ரஜினி – கமல் அவர்களே…
நீங்கள் உங்கள் மக்கள் சேவையை தாராளமாக செய்ய ஆரம்பியுங்கள்.. ஆனால் அதற்குமுன் உங்களை வளர்த்துவிட்ட இந்த திரையுலகத்திற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்..?
இந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. தற்போதைய போராட்டத்தை வெறும் க்யூப்புக்கான போராட்டமாக மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யாமல் இந்த திரைத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே போராட்டமாக நடத்தவேண்டும்.
நடிகர், நடிகைகள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.. எந்த ஹீரோவாக இருந்தாலும் அதிகபட்சம் 2 கோடி ரூபாய்க்குள் தான் சம்பளம் என்று நிர்ணயிக்க வேண்டும்.. அதன்பின் படம் ஓடுவதை வைத்து, அதில் கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் அளிக்கலாம்.

இப்படி செய்யும்போது தயாரிப்பளர்களும் நிம்மதியாக படம் தயாரிக்க முடியும். படம் நன்றாக ஓடும் பட்சத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் அனைவருக்குமே நல்ல லாபமும் கிடைக்கும். அதேசமயம் படம் ஓடாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நட்டம் ஏற்படாது.
இந்தி திரையுலகில் இந்த “சிஸ்டம்”தான் நடைமுறையில் இருக்கிறது. இன்றைக்கு மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மோகன்லாலின் சம்பளமே 3 கோடி தான். ஆனால் இங்கேதான் ஒரே ஒரு படத்தில் நடித்தவர்கள் கூட, அடுத்த படத்திற்கு 5 கோடி ரூபாய் கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து.. அல்ல அல்ல… நாமே அவர்களது சம்பளத்தை ஏத்திவிட்டு, நம் தலையில நாமேளே கொள்ளி வைத்துக்கொள்கிறோம்.
இதேபோல இயக்குனர்களுக்கும் சம்பள விகிதம் நிர்ணயம் பண்ணவேண்டும். முதல் படம் ஹிட் என்றால் அடுத்த படத்திற்கே இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள். எதற்காக அவ்வளவு கொடுக்கவேண்டும்..? ஜனாதிபதிக்கே அவ்வளவு சம்பளம் கிடையாது.
3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்பது ஏற்கவே முடியாதது” என்று தெரிவித்துள்ளார் யாரிப்பாளர் சதீஷ்குமார்.
[youtube-feed feed=1]