சென்னை:
உலக மகளிர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக நடிகை ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவையொட்டி, கட்சியினர் யாரும் போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது என்று கமல் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, நடிகர் கமல்ஹாசனின் மநீம கட்சி சார்பில் சென்னையில் நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் கமல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஏராளமான அளவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கமல் பெண் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல், பெண்கள் சமூக வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதாகவும், தனது கட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.