மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் மோசடியில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி சந்திரகாந்த் கார்கரே மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளனர்.

நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் செயலாளர் பன்குரி கடந்த 13ம் தேதி முதல் பதவி விலகியதாவும், கர்கரே 15ம் தேதி முதலும் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் சங்கமேஸ்வரனும் ராஜினாமாக செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் வெப்சைட் பராமரிப்பு காரணம் என்று கூறி முடக்கப்பட்டுள்ளது. கார்கரே சொந்த காரணங்களுக்காக பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜினாமா கடிதத்தில், ‘‘எனது மனைவிக்கு லீலாவதி மருத்துவமனையில் பெருங்குடலில் முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை எதிர்பார்த்த அளவில் இல்லை.

இந்த நிலையில் தலைமை நிதி அதிகாரியாக என்னால் பொறுப்புகளை மேற்கொள்வது கடினம். அதனால் எனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை கீதாஞ்சலி நிறுவனம் மும்பை பங்கு சந்தை வசம் அளித்துள்ளது. கீதாஞ்சலி நிறுவன பங்கு விலை தொடர்ந்து இன்றும் 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.