லண்டன்:

ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஏதேனும் வித்தியாசமாக செய்து காதலனும் காதலியும் ஒருவரையொருவர் ஈர்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள்.

தற்போது சமூக வலை தளங்கள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் ஏதேனும் வித்தியாசமாக செய்து அதை வெளியிடுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று காதலர் தினத்தை ஒரு விமானம் வித்தியாசமாக கொண்டாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விர்ஜின் அட்லான்டிக் விமானம் ஒன்று லண்டன் காட்விக் விமான நிலையில் இருந்து புறப்பட்டு தென்மேற்கு கடல் பகுதி நோக்கி பறந்தது. நேற்று காலை 11.30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் 2 மணி நேரம் பறந்து வானில் ஆர்ட்டின் வடிவத்தை வரைந்தது.

இதற்கான அந்த விமானம் கூடுதலாக 100 மைல் தூரம் வரை பறந்துள்ளது. விமானத்தின் ஆர்ட்டின் வடிவ பயண வழித்தடத்தை ஃபிளைட்ரேடார் 24 என்ற விமான போக்குவரத்து கண்காணிப்பு இணையதளம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. எனினும் இதற்காக நேரத்தை வீணடித்ததாக பயணிகள் குற்றம்சாட்டினர்.