
கதிராமங்கலம்
தனக்கு முதல்வராக விருப்பமில்லை எனவும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை முதல்வராக்கப் போவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
அதிமுகவில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணி இணைந்த பின் தினகரன் ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுயேச்சையாக நின்று ஆர் கே நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றார்.
தற்போது மீதேன் எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கதிராமங்கலம் கிராமத்துக்கு தினகரன் சென்றுள்ளார். அங்கு அவர் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மற்றும் போராடி வரும் மக்களை சந்தித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் குடிநீர் கலங்கலாக வருவதாகக் கூறி ஒரு பாட்டிலில் சாம்பிள் அளித்தனர். மற்றும் ஓ என் ஜி சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
அப்போது தினகரன், “மீதேனுக்கு எதிரான கதிராமங்கல கிராம மக்கள் போராட்டத்துக்கு எனது ஆதரவு என்றும் உண்டு. வைரமே இங்கு கிடைத்தாலும் சரி, டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மட்டுமே நடக்க வேண்டும். ஓ என் ஜி சி இங்கிருந்து வெளியேற வேண்டும். இங்குள்ள மக்களுக்கு ஆதரவாக தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக உள்ளோம்.
நான் முதல்வர் பதவிக்கு ஆசை படவில்லை. எதிரணியினர் எங்களுடன் இணைய வேண்டும் எனில் நான் குறிப்பிடும் 6 அமைச்சர்களை நீக்க வேண்டும். அத்துடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்ட மன்ற உறுப்பினர்களில் ஒருவரை நான் முதல்வராக்க உள்ளேன்” என பத்திரிகையளர்களிடம் கூறினார்.
[youtube-feed feed=1]