சென்னை,
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுகவில் இருந்த வைகோ பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய பிறகு, 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக அண்ணா அறிவாலயம் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். வைகோவை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிருஷ்ணன் அறிவாலயம் வந்தனர். மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில், தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு விவகாரம், மாநில சுயாட்சியை பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் லஞ்சம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அதை எதிர்கொள்ள வேண்டியது குறித்தும் திமுக தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.