சென்னை
இன்று காணும் பொங்கல் விழா என்பதால் சென்னை மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை மற்றும் அனைத்து பொழுது போக்குதலங்களில் இன்று காணும் பொங்கல் என்பதால் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் வருவதுண்டு. முக்கியமாக மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும் . இங்கு கூடும் மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினர் பல ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் ஆறு தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்து இரு காவலர்கள் ஒவ்வொரு கோபுரத்திலும் கண்காணிப்பில் ஈடுபட உளனர். தொலை நோக்கி, வாக்கி டாக்கி ஆகியவைகளும் வழங்கப்பட்டுள்ளன. இரு ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவக் குழுவினரும் மற்றும் தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
நேற்று முதலே கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக சவுக்குக் கட்டைகளைக் கொண்ட தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மீறி குளிப்பவர்களைக் கண்காணிக்க குதிரைப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். இந்த வருடம் சுமார் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
குழந்தைகள் காணாமல் போகக் கூடும் என்பதால் அதைத் தடுக்கவும் சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளின் கையில் கடற்கரைக்கு வரும் போது அடையாள பட்டை கட்டப்பட உள்ளது. அதில் பெற்றோரின் பெயர், அல்லது குழந்தைகளை அழைத்து வந்துள்ள உறவினர் பெயர் மற்றும் அவர்களின் மொபௌக் நம்பர்கள் காணப்படும்.