சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கலுக்கு முன்பே ரூ.750 கோடி முதல் கட்டமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்த மசோதாவை துணை முதல்வர் ஓபிஎஸ் தபாக்கல் செய்தார்.

மேலும் குட்கா விவகாரம் குறித்து விசாரணை செய்து வந்த அதிகாரி மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சபையை விட்டு வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தார்.

போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து, 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது.

கடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின. இச்சூழ்நிலையில், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. மேலும், அரசு பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்கு றையை ஈடு செய்திட, 5,138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத் தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை அரசு வழங்கும் என்பதை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.