சென்னை,
தி.மு.க. செயல்தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
டிசம்பர் 25–ம் தேதி (இன்று) எழுச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து கிறிஸ்துமஸ் திருநாளை மனிதநேயத் திருவிழாவாக ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழுக்கும், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் கிறிஸ்தவ சமுதாயம் நீண்ட நெடுங்காலமாக ஆற்றிவரும் அரும்பணிகளை நினைவுகூர்ந்து, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருந்த நேரங்களில் எல்லாம் கிறிஸ்தவ சமுதாய மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதற்குச் செயல்வடிவமும் கொடுத்து நிறைவேற்றியவர் என்பதை இந்த நல்ல நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
மகிழ்ச்சிக்குரிய பெருவிழாவாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து அவர்கள் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,
போராட்டக் களங்களும், துன்பச் சுழல்களும் குவிந்து வருகிற இன்றைய மனிதகுல வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாகவும், மனிதநேயத்தின் மாண்பை உரைக்கும் மாமருந்தாகவும் உபதேச மொழிகளை வழங்கிய ரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக உலகெங்கும் கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தலையில் முள்முடி சூட்டப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி, கபாலஸ்தலம் எனப்படும் கொல்கதாவில், கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டதனால் அவர் சிந்திய இரத்தம்,
மனிதகுலத்துக்காக சிந்திய இரத்தமாகும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்காகவும், தமிழ்மொழியின் மேன்மைக்காவும், ஏழை எளியோரின் பிணியைப் போக்குவதற்காகவும், பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியைத் தருவதற்காகவும் ஆற்றியிருக்கின்ற அருந்தொண்டு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.
அன்பையும் பரிவையும் கனிவையும் நேசத்தோடு சக மனிதர்களிடம் பிரதிபலிக்கும் உணர்வுடன் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.