சென்னை
ஐ பி எல் பாணியில் சென்னையில் ஒரு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது.
கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் போராட்டம் நிகழ்ந்தது தெரிந்ததே. அதன் பிறகு சட்டம் மாற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஐ பி எல் பாணியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்று ஜனவரி 7ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முதலைப் பூங்காவுக்கு எதிரே உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு ஆகியோர் இணைந்து நடத்த உள்ளனர். இந்தப் போட்டி குறித்து இதை நடத்த உள்ளவர்களில் ஒருவரான ராஜ்மோகன் ஆறுமுகம், “தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாக பார்த்தது இல்லை. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்ற வருடம் மெரினாவில் திரண்ட லட்சக்கணக்கான மாணவர்களில் பலரும் இதை ஒருமுறை கூட பார்த்ததே இல்லை. அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இந்தப் போட்டி சென்னையில் வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 500 இளைஞர்கள் பங்கு பெற உள்ளனர். மொத்தம் 3 ரவுண்டுகள் நடக்கும் இந்தப் போட்டியில் வீரர்கள் ஐந்து குழுவாக விளையாடுவார்கள். சுமார் 20 காளைகள் இந்தப் போட்டியில் அவிழ்த்து விடப்படும். ஒவ்வொரு ரவுண்டின் முடிவிலும் ஒரு குழு தகுதி இழக்கும். இந்தப் போட்டியில் வெல்வோருக்கு மாபெரும் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. பரிசு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தம் பற்றிய மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அரசின் ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளோம். இதில் சில சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான காளைகளும் கலந்துக் கொள்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.