சென்னை,

டந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம்  தேர்வு வைக்கப்பட்டு, தேர்வு செய்து   அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்  ரூ.7,700 சம்பளம்  என்ற ஒப்பந்தம்  அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

 

இந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து அவ்வப்போது சிறுசிறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், தமிழக அரசின்  சுகாதாரத்துறை அவர்களின் கோரிக்கையை இதுவரையில் ஏற்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு எம்.ஆர்.பி. நர்சு மேம்பாட்டு சங்கம் சார்பில் நர்சுகள் சென்னையில் இன்று  அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து  ஏராளமான நர்சுகள் சென்னை யில் இன்று குவிந்தனர். அதைத்தொடர்ந்து சென்னை மவுன்ட்ரோடு தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் போராட்டம் நடததி  நுழைய முயன்றனர்.

ஆனால், அவர்களை போலீசார் தடுத்ததால், அண்ணா சாலையில் உட்கார்ந்து சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அண்ணாசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி டிஎம்எஸ்  உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது  டி.எம்.எஸ். வளாகத்தில் அமர்ந்து அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நர்சுகள் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவப்பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.