கோவை:

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக நடுரோட்டில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு கம்பத்தில் மோதி அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் சிக்கி இறந்தார்.

 

கோவை, சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ரகுபதி (வயது 32). அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பெண் பார்ப்பதற்காக 12 நாட்களுக்கு முன் கோவை வந்தார். இன்று மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் பழநி செல்வதற்காக நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பைக்கில் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் புறப்பட்டார். பஸ் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்து பஸ் மூலம் பழநி செல்ல திட்டமிட்டிருந்தார். கோவை அரசு மருத்துவ கல்லூரியை தாண்டி, ஹோப்காலேஜ் மேம்பாலம் மீது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நடுரோடில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக 50 அடி உயரத்தில் சவுக்குக் கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு மீது ரகுபதி சென்ற பைக் மோதியது. இதில், நிலைதடுமாறி ரோட்டில் விழுந்த ரகுபதி மீது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது

இந்த விபத்தில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரகுபதி பரிதாபமாக இறந்தார். இவர் பலியான சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில், விபத்துக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சமூகவலைதளத்தில் பதிலளித்த கமிஷனர் விஜயகார்த்திகேயன், ‘‘உரிய அனுமதி பெறாமல் அலங்கார வளைவுகளை அமைத்துள்ளனர். அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்நிலையில் சம்பவம் நடத்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சவுக்கு வளைவு அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ‘‘ரகுவை யார் கொன்றது’’ என்று ஆங்கிலத்தில் ரோடில் சிலர் எழுதியுள்ளனர். இந்த காட்சி சமூக வலை தளங்களில் மேலும் வைரலாகியுள்ளது. விளம்பரம் மற்றும் அதிகார பசி கொண்ட அரசியல் வாதிகள் இதற்கு பதில் அளிப்பார்களா? என்று சமூக வலை தளங்களில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.