சென்னை,

நேற்று முதல் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறும்போது, சசிகலா குடும்பத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை குறித்து டில்லியில் உள்ள வருமான வரித்துறை  அதிகாரிகளிடம் விசாரிப்பேன் என்று கூறி உள்ளார்.

 

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி  சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது செய்தியாளர்கள், ஜெயா டி.வி. உள்பட சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சாமி, இவ்வாறு ஒருதலைப்பட்சமாக சோதனை நடத்தினால் பல சந்தேகங்கள் வரும். சோதனை குறித்து டில்லியில் உள்ள  வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்வேன் என்றார். எங்கு ஊழல் நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

மோடி கருணாநிதியை சந்தித்தது, அரசியல் நாகரிம். உடல்நலக்குறைவுடன் யார் இருந்தாலும் அவர்களை சந்திப்பது வழக்கம் என்றும், . தமிழகத்தில்தான் எதிர்க்கட்சியினர்  திருமணங்களில்கூட  பங்கேற்பது கிடையாது. இதற்கெல்லாம்,  சினிமா கலாசாரம்தான் காரணம்.

ஆனால், மகாபாரத காலத்தில்கூட  துரியோதனன் படையில் யாராவது  இறந்துபோனால் பாண்டவர்கள் வந்து நிற்பார்கள் என்று கூறினார்.

மேலும் மோடி கருணாநிதி சந்திப்பின் காரணமாக பாஜக கூட்டணி வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அப்படி ஒரு தவறு நடைபெறாது என்றும், ஏற்கனவே ஒருமுறை நடந்த தவறு இனி நடக்காது, கூட்டணியும் வராது என்று கூறினார்.

இரட்டை இலை குறித்த கேள்விக்கு பதிலளித்த சாமி, இரட்டை இலை சின்னம்  சசிகலா தலைமையிலான அணிக்குத்தான் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.