கடலூர்,

வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஏரி நிரம்பி உள்ளதால்  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது வீராணம் ஏரி. இதன் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டு, சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

தற்போது பெய்து வரும்  வடகிழக்கு பருவமழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 1400  கனஅடி தண்ணீர்   வீராணம ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேலும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் செங்கால் ஓடை மூலமும் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக தற்போது வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.5 அடியில் 45 அடியை எட்டியுள்ளது.  மேலும் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், உபரி நீர் சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல்  60 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நீர் இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீராணம் ஏரி வண்டதால், சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு ஏரி நிரம்பி உள்ளதால் சென்னை குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.