டில்லி,
திருப்பதி லட்டு, ஐதராபாத் பிரியாணி போன்ற உணவு பண்டகங்களின் படங்கள் இடம்பெற்ற அஞ்சல் தலைகளை மத்திய தபால்துறை வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.
மறைந்த தலைவர்களின் புகைப்படங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்றவற்றை சிறப்பு சேர்க்கும் வகையில் அவர்களின் படங்கள் இடம்பெற்ற அஞ்சல் தலைகள் தபால்த்துறை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கையை ஏற்று, உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் பிரசாதங்களான, லட்டு மற்றும் பொங்கல் படங்களுடன் கூடிய புதிய தபால் தலைகளை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதேபோல் ஐதராபாத் பிரியாணி, இட்லி தோசை ஆகிய உணவு வகைகளின் படங்கள் இடம்பெற்ற 5 ரூபாய் அஞ்சல் தலைகளையும் தபால் துறை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2002ம் ஆண்டு பிரமோத் மகாஜன் மத்திய அமைச்சராக இருந்தபோது, திருப்பதி கோவிலின் ஆனந்த நிலைய தங்க விமானம் ( ‘Ananda Nilayam Vimanam) தபால்தலையாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுக்கு லட்டு தபால்தலை வெளியிட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் கோரியதை தொடர்ந்து, தற்போது திருப்பதி லட்டு தபால் தலை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.