சென்னை
தான் எதற்கு அரசியலுக்கு வருகிறோம் என்பதற்கு நடிகர் கமலஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் முதலில் டிவிட்டர் மூலம் தன் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். தற்போது எண்ணூர் சென்று அங்கு குசஸ்தலை ஆற்றில் நடந்துள்ள ஆகிரமிப்புகளை பார்வை இட்டார். சமீபத்தில் இந்து தீவிரவாதம் என அவர் பதிவிட்டது மேலும் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் அவர் தனது நற்பணி இயக்கத்தினரை கூட்டி நேற்று சென்னை கேளம்பாக்கத்தில் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். அத்துடன் பல நலத்திட்ட உதவிகளையும் ஏழைகளுக்கு அளித்தார்.
கூட்டத்தில் கமல், “நமது இயக்கம் 37 ஆண்டுகளாக சமுக சேவைகள் செய்து வருகிறது. ஆனால் விளம்பரம் தேடுவதில்லை. இன்னும் கையேந்துபவர்கள் ஏராளமாக உள்ளதால் நமது வேலை இன்றும் முடியவில்லை. நாமும் கை ஏந்தி நிற்கிறோம். ஆம் தமிழ் மக்களுக்காக 37 வருடமாக நான் கை ஏந்துகிறேன்.
பல கூலி வேலை செய்கிறவர்கள், சிறு வியாபாரிகள் இங்கு கூடி உள்ளனர். அவர்கள் தங்களையும் கவனிக்கிறார்கள், தானமும் செய்கிறார்கள். இவர்களைப் போல பல வள்ளல்களை உருவாக்கவே நான் கை ஏந்துகிறேன். பணக்காரார்கள் ஒழுங்காக வரி கட்டினால் விவசாயிகள் பிரச்னை உட்பட நாட்டின் அனைத்து பிரச்னைகளும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
இது கால்வாய் வெட்டும் நேரம். இப்போது வெட்டாவிட்டால் இனி எப்போதும் வெட்ட முடியாது. இனியும் நான் ஒதுங்கி இருந்தால் என்னை வளர்த்தவர்களுக்கு நான் நன்றி அற்றவன் ஆஇ விடுவேன். நான் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. முன்னேற்பாடுகளை முடிக்கத் தான் காத்திருக்கிறேன்” என தனது உரையில் அரசியல் பிரவேசம் பற்றி கூறி உள்ளார்.