ரவுண்டஸ்பாய்னு பேர வச்சுக்கிட்டு இந்த மழை வெள்ளத்துல ஆபீஸ்லயே உக்காந்திருக்க முடியுமா. ஒரு ரவுண்ட் கிளம்பளாம்னு அண்ணன் மேகா சார்கூட கிளம்புனேன்.
வெள்ளத்தால அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்ல ஒன்னு மடிப்பாக்கம் ஏரியாவாச்சே. அந்தப்பக்கம் போலாம்னு கிளம்புனோம்.
ராம்நகர், குபேரன் நகர் பகுதிகள்ள பல இடங்கள்ல கணுக்கால்லேர்ந்து முழங்கால் வரைக்கும் ரோடுல தண்ணி தேங்கியிருக்கு. நம்ம ரெண்டு சக்கர வாகனம் எந்த நேரத்துல கவுருமோன்னு பயத்திலதான் போயிட்டிருந்தோம்.
சில வீடுகளுக்குள்ள தண்ணி பூந்திருக்கிறதை பார்க்க முடிஞ்சுது. அதில பல வீடுங்க பூட்டிக்கிடக்கு. வீட்டுக்காரங்க முடிஞ்ச அளவு பொருளுங்களை எடுத்துக்கிட்டு மேட்டுப்பக்கமா இருக்கிற தங்களோட நண்பர்கள், உறவினருங்க வீட்டுக்கு போயிட்டாங்களாம்.
கேட்கவே பரிதாபமா இருந்துச்சு.
குபேரன் நகர் ஏழாவது தெருகிட்ட வந்தோம். பெரிய சாக்கடையில பொங்கி வந்த தண்ணிய மோட்டார் வச்சு எடுத்துக்கிட்டிருந்தாங்க.
அட, அரசோட நிவாரணப்பணி வேகமாத்தான் நடக்குதுன்னு மனசு திருப்தியாச்சு. அப்படியே புடிக்கலாம்னு இறங்கினேன்.
அட..
சாக்கடையில பொங்கி வர்ற தண்ணிய மோட்டார் போட்டு எடுத்து பக்கத்துல தெருவுலேயே விட்டுக்கிட்டிருந்தாங்க.
அடப் பாவிகளா… சாக்கடையில வர்ற தண்ணி பொங்கி, சாலையிலதானே போவுது. அதுக்கு மாத்து வழி யோசிக்காம, அதே வேலையை மோட்டார் வச்சு செய்யணுமானு தோணுச்சு.
இந்த முக்கிய வேலையை மேற்பார்வையிட்டுக்கிட்டு இருந்த மாநகராட்சி ஊழியர்கிட்ட “சாக்கடை அடைச்சிருக்கு. அதுல பொங்கி வர்ற தண்ணி அப்படியே ரோடுக்குத்தானே வருது. இதில மோட்டார் வச்சு, ரோட்டுல தண்ணிய விடணுமா.. இப்படி பண்ணா ரோடுலதானே தண்ணி தேங்கும்.. எந்த பலனும் இல்லையே”னு மூச்சிறைக்க கேட்டேன்.
“அதிகாரிங்க சொன்னாங்க.. நான் செய்யறேன்” அப்படின்னு சிம்பிளா சொன்னாரு.
“சரி.. உங்க அதிகாரிங்க நம்பர கொடுங்களேன்.. பேசறேன்”னு சொன்னேன்.
காதில வாங்காத மாதிரி இருந்தாரு.
சரி இவருகிட்ட பேசி ஆவாதுன்னு, எடிட்டர்கிட்ட போன் பண்ணி அந்த ஏரியா மாநகராட்சி அதிகாரிங்க நம்பரு வாங்கி பேசினேன்.
“பல இடத்துல பல பணிங்க பண்ணிட்டிருக்கோம் சார். சரி செய்யச் சொல்றேன்”னு சொல்லிட்டு போனை வச்சட்டாரு.
மத்த ஏரியா பக்கம் ஒரு ரவுண்டு போயிட்டு மறுபடி அங்க வந்தேன்.
அதே மாதரி சாக்கடையில இருந்து தண்ணிய எடுத்து ரோட்டுல விட்டுக்கிட்டிருந்திச்சு மோட்டாரு! பக்கத்துல நின்னு கடமையே கண்ணா அதைப் பார்த்துக்கிட்டிருந்தாரு அதே மாநகராட்சி ஊழியரு.
இப்படி ஆகாத வேலைக்கு, கரண்ட் செலவு, எந்திர வாடகை, ஆளுக்கு சம்பளம்…
என்னத்தச் சொல்றதுன்னு புரியலே..
இந்த ஒரு இடத்துல நடக்கற வச்சே, மத்த இடத்துலயும் எந்த அளவுக்கு அக்கறையா நிவாரண பணிங்க நடக்கும்ணு நினைச்சுப்பார்த்தேன்.
அப்புறம்தான் தோணுச்சு…
“மழை வெள்ள காலத்துல அமெரிக்கா, லண்டனில் எடுக்கப்பட்டதைவிட சென்னையில் சிறப்பான நடவடிக்கை மேற்கொள்கிறோம்டனு அமைச்சர் வேலுமணி சொன்னாரே..
அது இதுதானோ அப்படின்னு தோணுச்சு!
கீழே இருக்கிறது நம்மோட மழை ரவுண்ட்ஸ்.. பதினெட்டு செகண்ட்ஸ்தான் பாருங்களேன் ஏரியாவை..