போபால்:

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் குறித்து விமர்சனம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவின் வாஷிங்டன் சாலைகளை விட சிறப்பாக உள்ளது என்று முதல்வர் சவுகான் தெரிவித்திருந்தார். முதல்வரின் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அருண் யாதவ் மற்றும் மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர். சமூக வலை தளங்களிலும் பலர் கேலி, கிண்டல் செய்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் கூறுகையில், ‘‘சமீபத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அமெரிக்கா சென்றார். பிற மாநிலங்களை விட ஊரக துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட பல துறைகளில் மத்திய பிரதேசம் சிறந்து விளங்குகிறது. முதலீடுகளை கவருவதற்காக முதல்வர் சில கருத்துக்களை தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது. இதை காங்கிரஸ் தலைவர் விமர்சனம் செய்ததில் தேச துரோகம் உள்ளது. அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

சவுகானுக்கு ஆதரவாக அவரது அமைச்சர்கள் விஸ்வாஸ சாரங், ராம்பால், கவுரி சங்கர் பைசன் ஆகியோர் களத்தில் குதித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ திக் விஜய் சிங் தலைமையிலான 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பிரதேச சாலைகள் மோசமாக இருந்தன. அதனால் சாலைகள் குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில் மாநில சாலைகளின் நிலை எப்படி இருந்தது என்பது குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும். மாநிலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மிஸ்ரா, உள்துறை அமைச்சரின் எச்சரிக்கைக்கு பதில் கூறுகையில், ‘‘சிவராஜ் சவுகான் அமைச்சரவையில் அரசுப் பணியாளராக பணியாற்றுபவரில் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.