சென்னை,

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது, இந்த கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என்ற டிடிவியின் கோரிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு அந்த உரிமை கிடையாது என கடுமையாக கூறினார்.

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப்பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப்பதிவு செய்தனர்.

இதையடுத்து வழக்கின் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மலர்மதி அக்டோபர் 26-ம் தேதியன்று டிடிவி தினகரன் நேரில் ஆஜரராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணைக்காக டிடிவி தினகரன் இன்று காலை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த வழக்கில்  அமலாக்கத் துறையினர் விசாரணையின்போது தங்களிடம் கேட்கும் கேள்விகளை, விசாரணக்கு முன்பே தங்களுக்குத் தர வேண்டும் என்று கோரினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி மலர்மதி, அமலாக்கத் துறை தங்களிடம் இந்தக் கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவரே கேட்பது கண்டிக்கத்தக்கது. நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் வாங்கும் சம்பளத்துக்கு நான் வேலை செய்ய வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு சிவில் நீதிமன்றத்தில் இருப்பது போல் கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமை இல்லை என்று தெரிவித்தார். மேலும், குறுக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராகாததால் ஏற்பட்ட விளைவுகள் இவை என்று தனது அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி மலர்மதி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார்.

 

இதன் காரணமாக சிறிது நேரம் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.