சென்னை,
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக சர்ச்சை கருத்துக்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.
அவரது சர்ச்சையான கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கிருஷ்ணசாமி, தனது மகள் மதிப்பெண் குறித்து நினைவில்லை என்று கூறி பதில் கூறுவதை தவிர்த்தார்.
தனது மகள் மருத்துவம் படிக்க அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா உதவி செய்ததால் தான் அவர் மருத்துவம் படிக்க முடிந்தது. அந்த நன்றிகூட கிருஷ்ணசாமிக்கு இல்லை என்றும், அதற்கு ஜெயலலிதா கொடுத்த மரியாதை எப்படி இருந்தது என்பது குறித்தும், அப்போதைய கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவை அப்போதைய எம்எல்ஏ ஜவாஹிருல்லாவும் உண்மை என்று கூறியிருந்தார். மேலும், இதுபற்றிய தகவல் அப்போதைய சட்டமன்ற குறிப்பேடில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து நெறியாளர் கேள்விக்கு பதில்அளித்த கிருஷ்ணசாமி, அப்போது சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் மறுத்து பேசியது சட்டமன்ற பதிவேட்டில் பதிவாகவில்லை என்று கூறினார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு என்ன தெரியும்.. ஜால்ரா போடுவார்.. என்றும் கூறினார்.
மேலும் தனது மகள் கடந்த 2002ம் ஆண்டே பிளஸ்2 முடித்துவிட்டார். அவர் தகுதிக்கு மேலே மதிப்பெண் வைத்திருந்தார் என்றும் ஆனால், எவ்வளவு என்று தெரியவில்லை என்றும் கூறினார்.