சென்னை:
அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், டிடிவி ஆதரவு அணியினர் தமிழக அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவோம் என்ற அதிமுக எம்.பி. வைத்திய லிங்கத்தை கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக டிடிவி அறிவித்துள்ள நிலையில், இன்று ராஜன் செல்லப்பா மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் நிர்வாகத்தில் மாற்றம் செய்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுத்தொடர்பாக டிடிவி தினகரன் புதன்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜன் செல்லப்பா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மகேந்திரன் அப்பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரங்கசாமி எம்.எல்.ஏ. அதிமுக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயக்குமார் நீக்கப்பட்டு, அப்பொறுப்பில் மாரியப்பன் கென்னடி நியமனம்.
விருதுநகர் மாவட்ட கழக பொருளாளர் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எம்.ஜி.ஆர் மன்ற பொறுப்பிலிருந்து என்.அழகர்சாமி ஆகியோர் நீக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு பதில் விருதுநகர் மாவட்ட பொருளாராக டி.முத்தையா, எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளராக சி.சுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளராக அழகர்சாமி, புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக கே.விவேகானந்தன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் மா.சேகர் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு தனது அறிவிப்பில் தினகரன் கூறியுள்ளார்.