சென்னை:

திரைப்பட நடிகர் வினுச்சக்கரவர்த்தி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.


வினுச்சக்கரவர்த்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ம் ஆண்டு டிசம்பரில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்து உள்ளார்.

வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். கதை மற்றும் வசனகர்த்தாவாக திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர். தென் இந்திய மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். ரஜினி, கமல், பிரபு உள்பட பிரபல முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். கோபுரங்கள் சாய்வதில்லை, ராஜாத்தி ராஜா, குரு சிஷ்யன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர்.

வண்டி சக்கரம் படத்தில் நடிகை சில்க்சுமிதாவை அறிமுகப்படுத்தியவர். இறுதியாக 2014ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் நடித்தார். உடல் நலக்குறைவால் காலமான அவருடைய உடல் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.