டெல்லி:

நீதிபதிகள் நியமனத்திற்கு பெயர் பட்டியலை வழங்குமாறு உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிலுவையில் இருந்த நீதிபதிகள் நியமனம் தொடர்பான உயர்நீதிமன்றங்களின் கொலிஜியம் பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் ஏற்றுக் கொண்டது. தற்போது நீதிபதிகள் நியமனம் தொடர்பாக புதிய பெயர்களை பரிந்துரை செய்யுமாறு உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், உயர்நீதிமன்றங்களின் கொலிஜியம் கூட்டத்தை கூட்டி புதிய பொருத்தமான பெயர்களை பரிந்துரை செய்யுமாறு கேஹர் குறிப்பிட்டிருப்பதாக 3 உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் உறுதிபடிடுத்தியுள்ளனர். கடிதம் எழுதுவதற்கு முன் கேஹர் தனிப்பட்ட முறையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுடன் இது தொடர்பாக உரையாடியதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பரிந்துரைக்கப்படும் நபர்களின் நேர்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். எவ்வித சந்தேகங்களும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் வக்கீல்களின் சிறந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும். வயது வரம்பு 45 முதல் 55 வயதுக்குள்ளான நபர்களாக இருக்க வேண்டும் கேஹகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உயர்நீதிமன்றங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆயிரத்து 79 நீதிபதி பணியிடங்களில் 447 பணியிடங்கள் காலியாக உள்ளது. மத்திய அரசு பரிந்துரைத்த 90 பேர் கொண்ட பெயர் பட்டியலை உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்த பின்னரும் 33 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய நீதிமன்றமான அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 160 பணியிடங்களில் 50 சதவீத நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் உள்ள 72 பணியிடங்களில் 37 பணியிடங்கள் காலியாக உள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் 61 பணியிடங்களில் 34 பணியிடங்கள் காலியாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா நீதிமன்றதித்தில் 85 பணியிடங்களில் 39 இடங்கள் காலியாக உள்ளது.

வரும் ஆகஸ்ட் 27ம் தேதியுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் ஓய்வுபெறுகிறார். எனினும் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 3 நீதிபதி பணியிடங்களை நிரப்ப உச்சநீதிமன்ற கொலிஜியத்திடம் பரிந்துரைகளை அவர் கேட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் தலைமை நீதிபதி பணியிடம் உள்பட 3 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ் வரும் மே 27ம் தேதியும், பரபுல்லா சந்திர பான்ட் ஆகஸ்ட் 29ம் தேதியும் ஓய்வுபெறுகின்றனர்.

ஏற்கனவே நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நிலுவையில் இருந்த 143 பேர் கொண்ட பட்டியலில் 90 பேரது நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சட்டத்துறையின் உயர்பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., மலைவாழ் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பொறுப்புகளில் எஸ்சி., எஸ்டி பிரிவினர் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.