அகமதாபாத்:
முஸ்லீம்களுக்கு தரப்படும் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அதே அளவிற்கு சலுகைகளை இந்துக்களுக்கும் அளிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் விஷ்வ ஹிந்தி பரிஷத் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொகாடியா, ’ஏக் முத்தி அனஜ்’ என்ற திட்டத்தை அவர் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, உணவு தானியங்கள் நன்கொடையாக பெறப்பட்டு, ஏழை இந்துக்களுக்கு அளிக்கப்படும்.
இதுமட்டுமன்றி அகமதாபாத் நகர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் தொகாடியா தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர், “இந்துக்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து முஸ்லீம்கள் சலுகைகள் பெறும் போது, ஏன் படேல், தாக்கூர் மற்றும் கோலி சமூக மக்கள் சலுகைகள் பெறக் கூடாது? என்று பேசினார்.
இதேபோல் முஸ்லீம்களுக்கு புனிதப் பயணம் செய்யவும், அவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தவும் அரசு அவர்களுக்கு பல்வேறு மானியங்களை அளிக்கிறது. ஆனால் இந்துக்களுக்கு அவ்வாறு அளிக்கப்படுவதில்லை. என்று குற்றஞ்சாட்டினார். அதனால் முஸ்லீம்களுக்கு அளிக்கப்படும் மானியங்களும்,சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அதே அளவு சலுகைகள் இந்துக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.” என பிரவீன் தொகாடியா அந்த மாநாட்டில் தெரிவித்தார்.