சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பிளவுபட்டு உள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும்  செயல்பட்டு வருகிறது.

தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், இரட்டை இலையை கேட்டு இரு அணிகளும் தேர்தல் கமிஷனிடம் முட்டி மோதி வருகின்றன.

அதன் காரணமாக இன்று இரு அணிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய இருக்கிறது. அதைத்தொடர்ந்து இன்று இரவுக்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி காலியானது. அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் கட்சியின்  அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், சசிகலாவின்  பதவி ஆசையின் காரணமாக, தனது ஆதரவாளர்களின் மூலமாக, பொதுக்குழு மூலம் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி, சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட தாக அறிவித்தார். அதன் காரணமாக  முதல்வர் பதவியை பிடிக்கும் எண்ணத்தில், ஓபிஎஸ்-ஐ வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்.

இதன் காரணமாக வெகுண்டெழுந்த ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியாக உருவெடுத்தால். அவருக்கு ஆதரவாக ஒருசில சட்டமன்ற உறுப்பினர்கள் கைகோர்த்தனர்.

அதைத்தொடர்ந்து சட்டவிதிகளின்படி, அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் மனு கொடுத்தனர்.  இது குறித்து சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அவர் அதற்கு பதில் அளித்தார். இந்த பதில் குறித்து புகார் கொடுத்த ஓபிஎஸ் அணியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அவர்களும் பதில் அளித்தனர்.

இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு வருகின்றன.

தங்களுக்குள்ள ஆதரவு குறித்த விவரங்கள் தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தங்களிடம் 12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் உள்ளனர். தொண்டர்கள் அனைவரும் எங்களிடம்தான் உள்ளனர் என்றும் கூறியிருந்தனர்.

சசிகலா அணியும் கொடுத்த மனுவில், தங்களுக்கு  122 எம்எல்ஏக்கள், 37 எம்பிக்கள் உள்ளனர். நாங்கள்தான் உண்மையான அதிமுக. எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று மல்லுகட்டி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுடன் 6 ஆயிரம் தொண்டர்கள் தனித்தனியாக மனுவும், 6 லட்சம் பேரின் கையெழுத்தும், 40 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதற்கான ஆவணங்களையும் இணைத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று தேர்தல் கமிஷனில் விசாரணை நடைபெற இருக்கிறது.  ஓபிஎஸ் அணி சார்தபில் மைத்ரேயன் எம்பியுடன் பிரபல மூத்த வழக்கறிஞர்களான  ஹரீஸ் சால்வே, பாலாஜி, ராகேஷ் சர்மா, பரணீதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சசிகலா அணி தரப்பில் சல்மான் குர்ஷித், மோகன் பராசரன் மற்றும் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இரு அணியினிரும், தங்கள் வாதங்களையும், ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் முன்பு எடுத்து வைக்கின்றனர். அதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் இரு தரப்பு ஆதாரங்களை யும் பரிசீலித்து இன்று இரவுக்குள் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளையுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்  வேட்பு மனு தாக்கல் முடிய இருப்பதால்,சின்னம் குறித்த அறிவிப்பு இன்று தெரிவிக்கப்பட வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது.

ஏனெனில் இரட்டை இலை சின்னம்தான் அதிமுகவின் வெற்றிக்கு அஸ்திவாரம். இரட்டை இலை சின்னம் கிடைக்கும் அணிதான் வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இரு அணிகளும் இரட்டை இலை தங்களுக்கே வேண்டும் கோருவதால், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கவும் தேர்தல் கமிஷன் தயங்காது.

இதன் காரணமாக அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

அதிமுக சில குறிப்புகள்:

* அதிமுகவை  1972 அக்டோபர் 17ல் எம்ஜிஆர் தொடங்கினார்.  1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை அதிமுக சந்தித்தது.

* அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் தனது சின்னமாக இரட்டை இலையை தேர்வு செய்தார். இதை அப்போதைய மதுரை கலெக்டர் சிரியாக் ஒதுக்கினார். மாயத்தேவர் வெற்றி பெற்றதால் அதுவே அதிமுகவின் நிரந்தர சின்னமாக மாறியது.

* எம்ஜிஆர் மறைவுக்குபின் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

* 1989 பேரவை தேர்தலுக்கு பின் இரு அணிகளும் ஒன்றாகி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா வசம் அதிமுகவும், இரட்டை இலையும் வந்தன.

ஆக, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ந் தேதி நடைபெற  இருக்கிறது. “இந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பவருக்கே வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கும்” என்று சசிகலா, ஓபிஎஸ் இரு அணியினரும் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, தேர்தல் கமிஷன் இன்று அறிவிக்கப்போதும் முடிவுதமான் இரு அணியினரின் அரசியல் எதிர்காலம் என்ன என்பதை தீர்மானிக்கும்.