டில்லி,
தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் இன்று 7வது நாளாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ‘மரண போராட்டம்’ நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களது கோரிக்கை மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டவில்லை என்பது வருத்தகரமான செய்தி.
டில்லியில் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய சாலையான ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பார்ப்போரை பரிதாபமடைய செய்யும் அவர்களது போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான ஆண், பெண் விவசாயிகள் தொடர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போரபாடி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர் சட்டை அணியாமல் உடலில் நாமத்தைப் பூசிக்கொண்டும் கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்க விட்டபடியும் சாலையோரம் அமர்ந்தும், சாலைகளில் படுத்து உறங்கியும், அங்கபிரதட்சனம் செய்தும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
உயிர் போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், 100 நாட்கள் ஆனாலும் நீதி கிடைக்கும் வரை டில்லியை விட்டு போகப்போவதில்லை என்றும் போராட்டக்குழுவினர் கூறி உள்ளனர்.
இன்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு, மரண போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகளின் நிலைமை… தற்கொலைதான் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தும் வகையில் அவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக விவசாயிகளின் போராட்டம் டில்லியில் வசித்துவரும் தமிழக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்தியாவில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்பிக்களை கொண்டுள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களோ விவசாயிகள் போராட்டம் குறித்து எந்தவித நெருடலும் இன்றி டில்லியில் உள்ளனர்.
போராடும் விவசாயிகளுக்க தேவையான உதவிகளோ, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பது குறித்தோ கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருப்பது தமிழக மக்களுக்கு அதிமுக மீது மேலும் வெறுப்படைய செய்துள்ளது.
கடந்த ஒரு வார போராட்டத்தின் காரணமாக, வயதான விவசாயிகள் பலர் மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் உறுதியாக போராடி வருகிறார்கள்.
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சாலை வழியாக செல்லும் மத்திய அமைச்சர்களோ இதுகுறித்து சற்றும் கவலைப்படுவது இல்லை.
ஆனால், ஜாட் இன மக்கள் போராட்டம் நடத்த வருகிறார்கள் என்றவுடன் டில்லி மத்திய மாநில அரசுகள் எத்தனை முக்கியத்துவம் கொடுத்தது என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவோம்.
ஆனால், ஒரு வாரமாக ரோட்டில் அரைகுறை உடையுடன் மட்டுமின்றி அரைவயிற்றுடன் வாழ்வாதார பிரச்சினை குறித்து போராடி வரும் விவசாயிகளை கண்டுகொள்ள யாரும் இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை..
இந்தியா விவசாய நாடு என்கிறோம்… விவசாயிதான் இந்தியாவின் முதுகெலும்பு என்று வாயார பேசுகிறோம்… ஆனால் இன்று அந்த முதுகெலும்பு உடைந்துபோகும் நிலையில் உள்ளது என்பது பரிதாபகரமான விஷயம்…