தவுபால்:

ஆயுதப்படை சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இரோன் சர்மிளா. மணிப்பூரை சேர்ந்த இவர் இச்சட்டத்திற்கு எதிராக மேற்கொண்ட போராட்டம் காரணமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஜனநாயக முறையில் போராட முடிவு செய்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு திடீரென அரசியலில் குதித்தார். இவரது முடிவை கண்டு மக்கள் ஆச்சர்யப்பட்டதோடு அதிர்ச்சியும் அடைந்தனர்.

இதனால் சர்மிளா மக்கள் ஆதரவை இழந்தார். மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தவுபால் தொகுதியில் காங்கிரஸ் ஆட்சியின் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். இன்று வெளியான தேர்தல் முடிவில் சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்று சர்மிளா படுதோல்வி அடைந்துள்ளார்.

இவர் 3 முறை முதல்வராக இருந்த ஒருவரிடம் முதல் முறையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தது ஆச்சர்யமில்லை. எனினும் முதல்வர் ஒக்ராம் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 100 ஓட்டுக்கும் குறைவாக சர்மிளா பெற்றிருந்தது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வர வேண்டும், ஆயுதபடை சட்டத்துக்கு எதிரான அவரது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக இந்த தோல்வி கருதப்படுகிறது. இந்த தோல்வி அவரது உணர்வை உடைந்து போக செய்துள்ளது. இனி எக்காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரது மதிப்பை மணிப்பூர் மக்கள் ஏற்கவில்லை என்பது உள்பட பல அனுதாப கருத்துக்கள் சமூக வளைதளங்களில் இரான் சர்மிளாவுக்கு ஆறுதலாக வந்து கொண்டிருக்கிறது. மேலும், சிலர் அரவிந்த் கெஜ்ரிவால் இவருக்கு ஆதரவு கொடுத்ததால் தான் தோல்வி அடைந்துவிட்டார். கெஜ்ரிவால் மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர் என்ற கருத்துக்களும் பரவி வருகிறது.

குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும் சமபவங்கள் நடந்து வரும் சமயயத்தில் எப்படி ஒரு உண்மையான வேட்பாளர் 90 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.