கோவை,
கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார்.
குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட இந்த பந்தயம் பரபரப்பின்றி நடைபெற்றது.
கோவை வஉசி மைதானத்தில் இளைஞர்கள் போராடிவரும் நிலையில், கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயத்தை நடத்த அதிமுகவினரும், அரசு அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இதையறிந்த இளைஞர்கள் கொடிசியாக நோக்கி விரைந்தனர். அமைச்சர் வேலுமணி தலைமை யில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 100க்குமம் மேற்பட்ட மாணவர்கள் ரேக்ளா பந்தயம் நடத்த விடாமல் சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டிற்கான நிரந்தர சட்டம் கொண்டு வராமல் ரேக்ளா பந்தயத்தை நடத்த அனுமதிக்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் அமைச்சல் வேலுமணி ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். பொதுவாக 50க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பந்தயத்தில் பங்குபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஒருசில வண்டிகளே… அதுவும் அதிமுகவினரே போட்டியில் கலந்துகொண்டார்கள் என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
அரசு கவுரவ பிரச்சினையாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரேக்ளா, ஜல்லிக்கட்டு போட்டிகளை தனது ஆதரவாளர்களைக்கொண்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.