சென்னை: குஜராத் மாநில பள்ளி பாடத்தில் இருந்து, அம்பேத்கரின் உறுதிமொழிகளை நீக்க அம்மாநில அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் குஜராத் அரசின் நடவடிக்கையை கண்டித்து திராவிடர் கழக மாணவர் மற்றும் இளைஞர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நாகபுரியில் 5 லட்சம் பேர்களுடன் இந்து மதத்தைவிட்டு வெளியேறி, பவுத்தத்தைத் தழுவினார் அம்பேத்கர். அப்போது அவர் 22 உறுதி மொழிகளை உருவாக்கினார். அதனை அவரும், அவரைப் பின்பற்றி வந்த ஐந்து லட்சம் பேரும் உரக்கச் சொல்லி – உறுதிகளை ஏற்றனர்.
அந்த உறுதிமொழிகளில், “இந்து கடவுகள்களை ஏற்கமாட்டேன்: கடவுள் என்பவர் அவதாரம் எடுத்தார் என்ற கருத்தை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். புத்தர் என்பவர் மகாவிஷ்ணுவினுடைய அவதாரம் என்ற பிரசாரத்தை ஒப்புக் கொள்ள மாட்டேன். சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் போடுவது மாதிரி சடங்குகளை ஒரு போதும் இனி நான் செய்ய மாட்டேன்.
பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகள் எதிலும் நான் என்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டேன். எல்லா மனிதர்களையும் சமத்துவமாகக் கருதுவேன்: திருட மாட்டேன். பொய் சொல்ல மாட்டேன். மதுவைக் குடிக்க மாட்டேன்” போன்றவை உண்டு.
இவற்றில் சில இந்து மத்தினரை புண்படுத்துவதாகக் கூறி, பாடத்திட்டத்தில் இருந்து குஜராத் அரசு நீக்கியது. இதைக் கண்டித்து திராவிடர் கழக மாணவர் மற்றும் இளைஞர் அணி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்ட நோக்கங்களை விளக்கி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.