புதுடெல்லி:
குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்திபென் தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்படலாம் என பாரதிய ஜனதா வட்டாரங்களில் செய்திகள் உலா வருகிறது.
குஜராத்தில் நடைபெற்ற தலித் போராட்டம், பட்டேல் போராட்டம் போன்ற காரணங்களால் பெரும் நெருக்கடியை சந்தித்தவர் ஆனந்தி பெண்.
இதன் காரணமாக பொதுமக்களின் அதிருப்திக்கும், அகில இந்திய அளவிலும் விமர்சனத்துக்கு ஆளானார். இதன் காரணமாக பாரதிய ஜனதா மேலிடம் அவரிடம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி அறிவுறுத்தியது. இதன் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஆனந்தி பென்.
பாரதிய ஜனதா கட்சி கொள்கை படி 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்சி, பதவிகளில் இருந்து ஒதுங்க வேண்டும். அதன்படி 75 வயதை எட்டும், ஆனந்தி பென் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்றுகொண்டது.
கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜினாமா செய்ததால், அவருக்கு கவுரவமான பதவி கொடுக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது இதையடுத்து, ஆனந்திபென் கவர்னராக நியமிக்கப்பபடலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.
தற்போதைய தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. 2011ம் ஆண்டு ஆகஸ்டு 31ந்தேதி பதவி ஏற்ற கவர்னர் ரோசையாவின் பதவி காலம் 5 ஆண்டுகள்.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தததும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவர்னர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். ஆனால், காங்கிரசை சேர்ந்த கவர்னர் ரோசையா மட்டும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான அணுசரணையான உறவு காரணமாக அவரை பதவியை விட்டு விலக ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. அவருக்காக, முதல்வர் ஜெயலலிதா பாரதியஜனதா மேலிடத்திலும் பேசியதாக கூறப்பட்டது.
ரோசையாவின் 5 ஆண்டு பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் , புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேலை தமிழக கவர்னராக நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனந்தி விரும்பினால் தமிழக கவர்னர் பதவி நிச்சயம் என டெல்லி பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.