சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்னால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை, சமீபத்தில் கட்சியை வீட்டு நீக்கப்பட்ட விஷ்ணு பிரசாத் ஆதரளாளர் எரிக்க முற்பட்டனர். இதையடுத்து இருவரின் ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே காரணம் என்று பத்திரிகைகளில் பேட்டி அளித்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார்.
இதையடுத்து இளங்கோவனுக்கு எதிராக விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இன்று சென்னை சத்தியமூர்த்தி பவன் வாசல் அருகே கூடிய விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்களான சண்முக சுந்தரம், ஜி.ஜி. இளங்குமரன், தளபதி பாஸ்கர், பயாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் திரண்டு இளங்கோவன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அப்போது இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் அதை செல்போனில் படம்பிடிக்க முயன்றார். அவரை விஷ்ணுபிரசாத் ஆதரவாளர் ஒருவர் அடித்து உதைத்தார். இந்த தகவல் அறிந்து கோபமடைந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியில் ஓடி வந்தனர்.
விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட… இளங்கோவன் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
அப்போது விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனின் உருவபொம்மையில் பெட்ரோல் ஊற்றி அதை எரிக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் விலக்கிவிட முயன்றனர். நடுவே சிலர் கற்களையும் வீசி தாக்கினர். இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தலையீட்டின்பேரில் நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.