சென்னை: செல்போன்கள் மூலம், வாக்குப்பதிவு எந்திரங்களை குளறுபடி செய்ய முடியும் என்றும் அதற்கான செயல்விளக்கத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு செய்து காண்பிக்க இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”கல்வியை வணிகமாக செய்யக் கூடாது,
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வாங்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுபோல தமிழக அரசும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவேண்டும்.
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை தங்களுடைய இணையதளங்களில் பள்ளிகள் வெளியிடவேண்டும்.
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை கையும், களவுமாக பிடித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. ஆகவே சட்டத்திருத்தம் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு அந்த அதிகாரத்தை அளிக்க வேண்டும்.
ஜனநாயக முறைப்படி நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் சட்ட திருத்தம், மற்றும் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் நீதி, சட்டம் மற்றும் பணியாளர் நலன் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவை நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன்.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியையும் சந்திக்க உள்ளேன். இதுதொடர்பாக கட்சி தலைவர்கள், எம்.பி.க்களுக்கும் நான் கடிதம் எழுத இருக்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் அவர், “தமிழகத்தில் தேர்தல் கேலி கூத்தாக உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இனி நடக்கும் தேர்தலாவது நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கவேண்டும். பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும், பணம் கொடுத்து வெற்றிப்பெற்றது நிரூபிக்கப்பட்டால் வெற்றி செல்லாது என்று அறிவிக்கவேண்டும். பணம் கொடுக்கும் கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யவேண்டும்
இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என கொடுத்தார்கள். அடுத்து நாடளுமன்றத் தேர்தலில் 4 ஆயிரம், 5 ஆயிரம் பணம் கொடுப்பார்கள். இது இந்தியா முழுவதும் பரவினால், பணம் வைத்துள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையை உண்டாக்கிவிடும்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செல்போன்கள் மூலமாக குளறுபடிகள் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கான செயல்விளக்கத்தையும் நாங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு செய்து காண்பிக்க உள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலிலும் பா.ம.க. தனித்து போட்டியிடும். தேர்தல் சீர்திருத்தங்கள் செய்த பின்னர்தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்தவேண்டும்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 92 லட்சம் பேர் அ.தி.மு.க-தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கவேண்டும். அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தேர்தல் ஆணையத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் என்ற முறையில் அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா?” – இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்