karuna
சென்னை:

நான்காண்டு காலமாக தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள் என  தமிழக அரசை கருணாநிதி  விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

” தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதைப் போல நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து , சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி முதலீடுகளைக் குவிக்கப் போவதாக  ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த மாநாட்டைப் பற்றி எழுதியுள்ள அனைத்து நாளேடுகளும், அந்த மாநாட்டையொட்டி அதிமுகவினர் நடத்திய குத்தாட்டம் குறித்தும், நகரம் முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் முணுமுணுப்பு குறித்தும் எழுதத் தவறவில்லை.

அதிமுக ஆட்சியினர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இது போல முதலீட்டாளர்களையெல்லாம் அழைத்து பல நூறு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது, பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு என்றெல்லாம் ஒரு பெரிய விளம்பரம் செய்தார்கள்.

ஆனால் முதலீடும் வரவில்லை; வேலை வாய்ப்பும் ஏற்படவில்லை. அப்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களே உருப்படியாக நிறைவேற வில்லை என்கிற போது, அதிமுக ஆட்சியினர் போகிற போக்கில் போடுகின்ற ஒப்பந்தங்களுக்கு ஏதாவது மதிப்பு இருக்கப் போகிறதா என்ன?

அதனால் இப்போது வந்திருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் கூட மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறோம், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட் டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் வந்திருப்பதாக விளம்பரப்படுத்தியும் கூட தொடக்க விழாவின் போது அன்னிய முதலீட்டாளர் எவரும் பேசியதாகத் தெரியவில்லை.

இவற்றில் முக்கியமான கேள்வி, கையெழுத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் உண்மையிலேயே செயலாக்கத்திற்கு வரப்போகின்றன என்பதுதான்!

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன் தொழில் முதலீடுகள் சம்மந்தமாகத் தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றுள் வெறும் 235 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. உண்மையில் வந்து சேர்ந்த முதலீடு 0.3 சதவிகிதம்தான் என்பதை அறிய அனைவரும் வெட்கப்பட வேண்டும்!

2012ஆம் ஆண்டில் 21,253 கோடி ரூபாய் முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் 524 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே செயலாக் கத்துக்கு வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 2.4 சதவீதம் மட்டுமே.

2013ஆம் ஆண்டில் 27,380 கோடி ரூபாய் முதலீட் டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2292 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 8.3 சதவீதம்தான்.

2014ஆம் ஆண்டில் 14,596 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2500 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு 17 சதவீதம்தான்.

2015ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 17,412 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, வெறும் 41 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பணிகள் மட்டுமே நிறைவேறியிருக்கின்றன. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு வெறும் 0.2 சதவீதம் தான் என்பது எவரையும் தலை குனிய வைப்பதாகும்.

ஆக அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு வெறும் 5.64 சதவீதம்தான். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும் முதலீடுகளின் அளவுக்கும், உண்மையிலேயே செயலாக்கத்துக்கு வரும் முதலீடுகளின் அளவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதற்கு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு தேவையான அளவுக்கும் தரத்திற்கும் இல்லாததும், அரசின் தொழில் கொள்கையும் – அதிகார அமைப்பும் தொழில் முதலீட்டாளர் களுக்கு அனுசரணையான அணுகுமுறையினைக் கையாளாததும்தான்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த முறையெதையும் பின்பற்றாமல், முதலீடுகளை ஈர்ப்பதில் மிகப் பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகு, 2016 தேர்தல் விளம்பரத்திற்காக கடைசி நேரத்தில் சாதிக்கப் போகிறோம் என்று சவடால் பேசுவது எந்த அளவுக்குச் சாத்தியமாகி நல்ல விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது?” எ

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.