சாலை விபத்தில் உயிரிழந்த மகனால் பெற்றோர் அடைந்த மனவேதனையையும் இழப்பையும் துல்லியமான கணக்கீட்டின் மூலம் மதிப்பிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 2013-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 20 வயது பட்டயக் கணக்காளர் (CA) மாணவர் ஆகாஷ் குமார் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்தது.

ஆகாஷ் குமார் CA இறுதி ஆண்டு படிப்பையும், பயிற்சிக் காலத்தையும் மேற்கொண்டு வந்தார். அவர் பயணித்த கார், அதிகாலை 3 மணியளவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். லாரி எச்சரிக்கை விளக்குகள், பிரதிபலிப்பு கருவிகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் இன்றி இருளில் நிறுத்தப்பட்டிருந்ததாக அவரது பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், லாரி ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனக் கண்டறிந்து, ஆகாஷ் குமாரின் பெற்றோருக்கு ரூ.81.21 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து, இழப்பீட்டை குறைக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தையும், இழப்பீட்டை உயர்த்த வேண்டும் என்று பெற்றோரும் அணுகினர்.
காப்பீட்டு நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், “இளம் வயதில் எதிர்காலம் நிறைந்த ஒருவரின் உயிரிழப்பால் குடும்பம் சந்திக்கும் இழப்பை வெறும் கணக்கீட்டின் மூலம் அளவிட முடியாது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நியாயமான இழப்பீடு என்பது கணிதத் துல்லியத்துடன் நிர்ணயிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல” என்று கூறியது.
அதே நேரத்தில், உயிரிழந்த மாணவர் நிச்சயமாக பட்டயக் கணக்காளராகி பெரிய தொழில்முறை வெற்றி பெற்றிருப்பார் என்ற ஊகத்தின் அடிப்படையில் கூடுதல் இழப்பீடு வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
எனினும், பெற்றோருக்கான ‘Filial Consortium’ (மகனை இழந்ததற்கான ஆறுதல் இழப்பீடு) தலைப்பில் எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தந்தை மற்றும் தாயாருக்கு தலா ரூ.40,000 வழங்க உத்தரவிட்டது.
இதனால், மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.81.21 லட்சத்திலிருந்து ரூ.82.01 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், தீர்ப்பாயம் நிர்ணயித்த வட்டியுடன் இந்தத் தொகையை நான்கு வாரங்களுக்குள் செலுத்த காப்பீட்டு நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
[youtube-feed feed=1]