திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இன்று (ஜூன்.21) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர்.
2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இரு வேறு மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், 23 நபர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 24 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பதால் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு செலவில் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]