சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், 73 வயது பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த அரிய வகை கோலோவேஜைனல் பிஸ்டுலா (Colovaginal Fistula) பாதிப்புக்கு, பொதுவாக இதயத்தில் உள்ள துளைகளை அடைக்கப் பயன்படுத்தப்படும் சிறப்பு கருவியை கொண்டு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர்.
கோலோவேஜைனல் பிஸ்டுலா என்பது பெருங்குடல் மற்றும் பிறப்புறுப்புக்கு இடையே இயல்பற்ற வகையில் உருவாகும் ஒரு பாதை அல்லது இணைப்பு ஆகும். இந்த பாதிப்பால் அந்தப் பெண் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவதிப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நிவாரணம் கிடைக்காத நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் காரணமாக உடலின் உள் திசுக்களில் அதிகளவில் தழும்புத் திசுக்கள் (Fibrosis), ஒட்டிக்கொண்ட திசுக்கள் (Adhesions) மற்றும் உடலின் இயல்பான அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் பெருங்குடலுக்கும் யோனிக்கும் இடையேயான அந்த இயல்பற்ற இணைப்பை கண்டறிவது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது.
எனினும், விரிவான பரிசோதனைகள் மற்றும் மேம்பட்ட எண்டோஸ்கோபி (Endoscopy) தொழில்நுட்பத்தின் உதவியுடன், அந்த இணைப்புப் பாதையை இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர்கள் துல்லியமாக கண்டறிந்தனர்.
பாதிப்பின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு, குடலியல் நிபுணர்கள் மற்றும் இதய இடைமுகச் சிகிச்சை நிபுணர்கள் இணைந்து புதிய சிகிச்சை முறையை வடிவமைத்தனர். இதயத்தின் இரண்டு அறைகளுக்கிடையிலான துளைகளை அடைக்கப் பயன்படுத்தப்படும் கார்டியாக் ஒக்ளூஷன் கருவி (Cardiac Occlusion Device)-யை மாற்றி அமைத்து, பெருங்குடல்–யோனி இணைப்புப் பாதையை மூடினர்.
சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், அந்தப் பெண் நல்ல உடல்நலத்துடன் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]