ஜெய்ப்பூர்: கூட்டுப் பாலியல் குற்றச்சாட்டில் இருந்து சாமியார் ஆசாராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்தது;  ஆனால்,  பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

2013-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, ஜோத்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றம் அந்த மதத் தலைவருக்கு 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

ஆசிரமத்தில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து சாமியார் ஆசாராம்  மற்றும் சக குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த இருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான பாலியல்  வழக்கில், அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட  வட மாநிலங்களில்  ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அவரது ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த  16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த  2018ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இதையடுத்து, அவர்  ஜோத்பூர் சிறையில்  அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.  அவ்வப்போது உடல்நிலையை காரணம் காட்டி  பலமுறை இவர் ஜாமீனில் வெளிவந்து செல்கிறார். தற்போதுகூட அவர் ஜாமினில் வெளியே உள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஆசாராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்தது. மேலும் அவர் மீது பதியப்பட்ட போக்சோ பிரிவு 5(G)/6, சம்பவத்திற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஐபிசி பிரிவு 120(B) வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்தது.

இதே வழக்கில் ஆசாராமுடன் சக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த சஞ்சிதா குப்தா மற்றும் சரத் சந்திரா ஆகிய இருவரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் முழுமையாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், அதே சிறுமியைத் தனிப்பட்ட முறையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ஆசாராமுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

[youtube-feed feed=1]