அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டால், அவர் தானாகவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டவராகக் கருதப்படுவார். இதற்கு தனியாக இடைநீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஷ்டிபூரில் உள்ள அரசு சாதர் மருத்துவமனையின் நிர்வாகியாகப் பணியாற்றியவர் விஷ்வஜீத் சிங். மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு வழங்க வேண்டிய ரூ.36 ஆயிரம் ஊதிய நிலுவையை விடுவிக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட விஷ்வஜீத் சிங், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து புகார் அளித்த ஒப்பந்த ஊழியர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஜூலை 1-ம் தேதி விஷ்வஜீத் சிங்கின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து விஷ்வஜீத் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியதுடன், பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தது.
அப்போது நீதிபதிகள், ஜாமீன் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கும்போது லஞ்சமாகக் கேட்கப்பட்ட தொகையின் அளவை மட்டும் அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். குற்றத்தின் தன்மை, குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படக்கூடிய தண்டனை மற்றும் குற்றம்சாட்டப்பட்டவரின் பின்னணி உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டே ஜாமீன் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் விஷ்வஜீத் சிங்கின் பணிநிலை தொடர்பானது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் இருந்தால், அவர் தானாகவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படுவார். இதற்கெனத் தனியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்றும் விளக்கினர்.
விஷ்வஜீத் சிங் முதலில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆனால், அவர் மீண்டும் அதே மருத்துவமனையில் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் பீகார் மாநில அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.