சென்னை: அரசு மருத்துவமனையில் ரசிக வெறி கும்பல் அட்டூழியம் செய்துள்ளது. இதை அடக்கி வைக்க வேண்டும் என முதல்வர் விஜயை அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில், மருத்துவ பணிக்கு இடையூறாக, சினிமா படம் போல டாக்டர் வேஷம் போட்டுக்கொண்டு, மருத்துவ அணி எனக் கூறிக் கொண்டு, நோயாளிகளை தொந்தரவு செய்யும் உங்கள் கட்சியினரை விஜய் அடக்கி வைக்க வேண்டும் முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் திட்டமிட்டு கவனம் ஈர்க்கும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது த.வெ.க. மருத்துவ அணி என்ற பெயரில் தங்கள் கருப்பு கோட் தலைவர் போலவே வெள்ளை கோட் மாட்டிக் கொண்டு ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு எல்லாம் சென்று அரசு மருத்துவர்களை, செவிலியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டி வருகிறது இந்த ரசிக வெறி கும்பல்.
ஏற்கனவே முந்தைய திமுக அரசால் நிறைய மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், கடுமையாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை, உங்கள் ரீல்ஸ் கண்டெண்டுக்காக மேலும் தொந்தரவு செய்வது செய்வது எப்படிப்பட்ட மனநிலை?
அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்த வேண்டும் என்றால், அதை துறை அமைச்சர் செய்யட்டும்; துறை அதிகாரிகளோடு இணைந்து சட்டமன்ற உறுப்பினர் செய்யட்டும். அதை விடுத்து, சினிமா படம் போல டாக்டர் வேஷம் போட்டுக்கொண்டு, மருத்துவ அணி எனக் கூறிக் கொண்டு, மருத்துவப் பணிக்கு இடையூறாக, நோயாளிகளை தொந்தரவு செய்யும் உங்கள் கட்சியினரை விஜய் அடக்கி வைக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களை அவர்களின் பணியை செய்ய விடுங்கள்” என தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சி தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தென்காசி தவெக மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையிலான தொண்டர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்ற நியாஸ் தலைமையிலான குழு அங்குள்ள வசதிகள் பற்றி கேள்வியெழுப்பினர். குறிப்பாக தவெக மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி மருத்துவர் கோட் அணிந்து ஆய்வு செய்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., எம்.பி., என இல்லாமல் கட்சியினர் இப்படி ஆய்வில் ஈடுபடுவதால் திமுக, அதிமுகவினர் இடையே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழ்நாடு முழுவதும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா உணவகம், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]